மின்வாரிய ஊழியர் வீட்டில் 16 பவுன் நகைகள் திருட்டு

பூட்டை உடைத்து மின்வாரிய ஊழியர் வீட்டில் 16 பவுன் நகைகள் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-20 19:00 GMT


ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள மார்க்கம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் சின்னக்காம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணியாற்றுகிறார். இவருடைய மனைவி அனிதா. இவர்களின் மகன் கவுதம். கடந்த 18-ந்தேதி இவர் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மார்க்கம்பட்டிக்கு திரும்பி வந்தார். அப்போது அவருடைய வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்தார்.


உடனே வீட்டின் உள்ளே சென்று அவர் பார்த்த போது, பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள் திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து இடையக்கோட்டை போலீசில் சுந்தர்ராஜ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.


மேலும் இதுகுறித்து இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்