இஸ்ரேலில் இருந்து மேலும் 16 பேர் சென்னை வந்தனர்- அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்

இஸ்ரேலில் இருந்து மேலும் 16 பேர் சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

Update: 2023-10-15 14:12 GMT

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இஸ்ரேல் நாட்டில் கல்வி பயிலவும், வேலைக்காகவும் சென்று சிக்கி இருந்த இந்தியர்களை மத்திய அரசு 'ஆப்ரேஷன் அஜய் ' திட்டத்தின் கீழ் விமானம் மூலம் மீட்டு வருகிறது. முதல் கட்டமாக 212 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் நேற்று முன்தினம் சென்னை மற்றும் கோவை வந்தடைந்தனர்.

இந்தநிலையில் 2-வது கட்டமாக இஸ்ரேலில் இருந்து நேற்று அதிகாலை 235 இந்தியர்கள் நாடு திரும்பினர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 28 பேர் அடங்குவர். அதில் 2 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட 16 பேர், 2 விமானங்களில் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். மீதம் உள்ள 12 பேர் டெல்லியில் இருந்து கோவைக்கு சென்றனர்.

சென்னை விமான நிலையம் வந்த 16 பேரையும் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பா.ஜ.க. சார்பில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகளும் வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் நடைபெறும் அசாதாரண சூழலில் தமிழர்கள் பாதிக்காத வகையில் மீட்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கொடுத்த அழுத்தத்தால் தொடர்ந்து 2 நாட்களாக மீட்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து தமிழர்களை மீட்டு வந்து டெல்லி வரையிலும் கொண்டு வந்து சேர்க்கின்ற பணியை மத்திய அரசும், டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு வருகின்ற பணியை தமிழக அரசு சார்பாகவும் செய்யப்படுகிறது.

இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களது வீடு வரை கொண்டு சேர்க்கும் பணியை தமிழக அரசின் செலவிலேயே செய்யப்படுகிறது. இதுவரையிலும் தமிழகத்தைச் சேர்ந்த 128 பேர் பதிவு செய்திருகிறார்கள். மீதமுள்ளவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள். சொந்த செலவில் 12 பேர் நேரடியாக வந்து உள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளும்போது, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால் தங்களோடு இருக்கின்ற மற்ற நாட்டவர்கள் அழைத்துச் செல்லப்படுவதால் தனியாக இருப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். இதனால் தாயகம் திரும்ப விரும்புகின்றவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்