விழுப்புரம் மாவட்டத்தில் 16¾ லட்சம் வாக்காளர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 16¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

Update: 2023-01-05 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் 1.1.2023 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி தொடங்கி டிசம்பர் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இப்பணியில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான விண்ணப்ப படிவங்களை பெற்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

16,90,315 வாக்காளர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 8,30,733 ஆண் வாக்காளர்களும், 8,51,645 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 209 பேரும் என மொத்தம் 16,82,587 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியின்போது பெயர் நீக்கம் கோரியவர்கள், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் என 7,739 ஆண் வாக்காளர்கள், 9,482 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தினர் 14 பேர் என 17,235 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்படி புதிதாக 11,400 ஆண் வாக்காளர்களும், 13,545 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 18 பேரும் என 24,963 பேர் சேர்க்கப்பட்டனர்.

இதன்படி தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 8,34,394 ஆண் வாக்காளர்களும், 8,55,708 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 213 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 90 ஆயிரத்து 315 வாக்காளர்கள் உள்ளனர்.

பொதுமக்களின் பார்வைக்கு

இந்த வாக்காளர் பட்டியல் சப்-கலெக்டர், கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், நியமன வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவுப்பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம்.

மேலும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி இன்றைய தினம் (நேற்று) முதல் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் அளிக்கலாம். இதுதவிர பொதுமக்கள், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

சேவை மையம்

பொதுமக்கள், வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதேனும் தேவைப்பட்டால் அலுவலக வேலைநாட்களில் வேலை நேரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையத்தை 1950-ஐ தொடர்புகொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி நல்லமுறையில் நடைபெற தேவையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. அர்ச்சுணன், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், வக்கீல் ராதிகா செந்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்