தூத்துக்குடியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 16 மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு
தூத்துக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 16 மாடுகளை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் கோசாலையில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்திருக்கும் மாடுகளால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்த புகாரின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளில் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதாக மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலைகளில் சுற்றித்திரிந்த 16 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர்.
கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை தங்களது பொறுப்பில் பராமரிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் கேட்டுக்கொண்டு உள்ளார்.