நகரமன்ற கூட்டத்தில் 16 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

வந்தவாசியில் நடந்த நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 16 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-07-31 18:04 GMT

வந்தவாசி

வந்தவாசியில் நடந்த நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 16 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நகரமன்ற கூட்டம்

வந்தவாசி நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் எச்.ஜலால் (தி.மு.க.) தலைமை தாங்கினார். பொறியாளர் சரவணன், துணைத்தலைவர் க.சீனிவாசன் (தி.மு.க.) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற 19-வது வார்டு கவுன்சிலர் வெ.ரவிச்சந்திரன் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், வந்தவாசி நகராட்சியில் கடந்த சில மாதங்களாக ஆணையாளர் மற்றும் மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இதனால் புதிய வீடுகளுக்கான வரி விதிப்பு, காலிமனை வரிவிதிப்பு, குடிநீர் குழாய் இணைப்பு ஆகியவை வேண்டி பொதுமக்கள் அளித்த 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. எனவே பொதுமக்களின் நலன் கருதி புதிய ஆணையாளரை உடனடியாக நியமிக்கக் கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

வெளிநடப்பு

இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் நகராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகள் கூட சரிவர நிறைவேற்றப்படவில்லை என சரமாரி புகார் தெரிவித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரமன்ற உறுப்பினர்கள் தீபா செந்தில்குமார், ஷீலா மூவேந்தன், ரா.அன்பரசு, மு.பீபிஜான், ஜொகராபீவி சித்திக், ச.நூர்முகமது, க.அஸீனா, கு.நாகூர்மீரான், பர்வீன்பேகம் காஜாஷெரீப், ரிஹானா சையத்அப்துல்கரீம், பா.சரவணகுமார், பா.சந்தோஷ், ம.கிஷோர்குமார், ப.ஜெயபிரகாஷ், கு.ராமஜெயம், அம்பிகா மேகநாதன் ஆகிய 16 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்