பழனி முருகன் கோவிலில் 15-ந்தேதி முதல் தங்கரத புறப்பாடு ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி முருகன் கோவிலில் வருகிற 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2023-10-10 06:20 GMT

திண்டுக்கல்,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

அதேபோல் கோவிலில் உள்ள தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் உள்ளிட்ட வழிபாடு முறைகளிலும் கலந்துகொள்கின்றனர். இதில் தங்கரத புறப்பாடு என்பது பழனி முருகன் கோவிலில் தினமும் மாலை 7 மணிக்கு நடைபெறும்.

இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் வருகிற 15 முதல் 23 வரை தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நவராத்திரி பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்கரத சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக பழனி முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 24-ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்