156 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) 156 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சளி, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ள 160 பேர் ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 68 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். மேலும் 3 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சலால் அவதியடைந்து வந்த 150-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வதுடன், சிறப்பு முகாமும் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று மட்டும் 80 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி பரவி வரும் நிலையில் சிறப்பு மருத்துவ முகாமை நடத்த சுகாதாரத்துறைக்கு, அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) 156 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் மக்கள் அந்த முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் இந்த காய்ச்சல் முகாமில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், நிலவேம்பு குடிநீா் போன்றவையும் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மீரா தெரிவித்துள்ளார்.