மாவட்டத்தில் சாலை, ரெயில் மறியலில் ஈடுபட்டகம்யூனிஸ்டு கட்சியினர் 156 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 156 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலையின்மையை போக்கிட வேண்டும். வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலுசாமி, தங்கமணி, தமிழ்மணி, கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தின் போது பொதுத்துறையை தனியார் மயம் ஆக்கக்கூடாது. அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்து, தனியார் பஸ்சில் ஏற்றி, திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். மதியம் 1 மணி அளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
156 பேர் கைது
முன்னதாக சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் சிலர் சாலையில் படுத்து கொண்டு வர மறுத்ததால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
இதேபோல் பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அசோகன் ரவி, கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ரெயில் நிலையம் அருகில் விலைவாசியை குறைக்க கோரியும், ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரியும், மத்திய அரசில் நிரப்பப்படாமல் உள்ள 10 லட்சம் வேலை வாய்ப்புகளை நிரப்ப கோரியும் கோஷமிட்டனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற சரக்கு ரெயில் முன்பு நின்றும், ரெயில் மீதி ஏறியும் கோஷம் இட்டனர். அவர்களை பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், மலர்விழி, பிரபாகரன், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஏட்டுகள், போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 10 பெண்கள் உள்பட 91 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் எலச்சிபாளையத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட 15 பேரும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 156 பேர் கைது செய்யப்பட்டனர்.