கெட்டுப்போன 155 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
இறைச்சிக்கடைகளில் நேற்று 3-வது நாளாக அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அதில் 155 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
கோவை
இறைச்சிக்கடைகளில் நேற்று 3-வது நாளாக அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அதில் 155 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சவர்மா என்ற கோழி இறைச்சி சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கோவை மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி நேற்று 3-வது நாளாக உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அவர்கள், கோவைப்புதூர், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், வடவள்ளி, பீளமேடு, சூலூர், சிங்காநல்லூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிரடியாக ஆய்வு செய்த னர்.
155 கிலோ இறைச்சி பறிமுதல்
பின்னர் ஓட்டல்களின் சமையல் அறைக்குள் சென்ற அதிகாரிகள் அங்கு கெட்டுப்போன இறைச்சி வைக்கப்பட்டு இருக்கிறதா? என்று சோதனையிட்டனர். அதில் சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் 63 கடைகளில் ஆய்வு செய்து 155 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். அவற்றின் மதிப்பு ரூ.54,950 ஆகும். மேலும் கெட்டுப்போன 20 கிலோ மசாலா பேஸ்ட், 1 லிட்டர் மையோனஸ் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் ஆய்வின் போது குறைகள் கண்டறியப்பட்ட 14 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய 7 கடைகளுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட் டது. இது போன்ற திடீர் களஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று கலெக்டர் கிராந்திகுமார் எச்சரித்து உள்ளார்.