150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜோலார்பேட்டை ரெயில் நிலையம்

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படைவசதிகளை நிறைவேற்றி தரம்உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Update: 2023-01-04 18:17 GMT

ஜோலார்பேட்டை என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் தான். அந்த அளவிற்கு புகழ் பெற்ற ரெயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சென்னை ரெயில்வே கோட்டத்தின் கடைசி எல்லையான ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் தமிழகத்தில் 2-வது பெரிய ரெயில் நிலையமாகும்.

ஆங்கிலேயர்கள் குளிர் சார்ந்த பிரதேசங்களில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். இதனால் தமிழகத்தின் மலைப்பகுதிகளான ஏலகிரிமலைக்கு ஜோலார்பேட்டையில் ரெயில் நிலையமும், ஏற்காடுக்கு சேலத்திலும், ஊட்டிக்கு கோயம்புத்தூரிலும் ரெயில் நிலையங்களை அமைத்தனர். ரெயிலில் பணிபுரியும் ஆங்கிலேயர்கள் தங்கள் பணிகளை முடித்த பின்பு ஓய்வெடுக்க மலைப்பகுதிகளில் தங்குவார்கள். இதற்காக அமைக்கப்பட்ட ெரயில்வே குடியிருப்பு கட்டிடங்கள் இன்றுவரை உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களையும் இணைக்கிறது. சுமார் 25 கி.மீ.தொலைவில் ஆந்திர எல்லையான குப்பம். 35 கி.மீ. தொலைவில் கர்நாடக எல்லையான பங்காருபேட்டை உள்ளன.

கன்னியாகுமரி முதல் டெல்லி வரை

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் அனைத்து ரெயில்களும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்துதான் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எழும்பூரிலிருந்து ஜோலார்பேட்டைக்கு மின்சார ெரயில் போக்குவரத்து உருவாக்கப்பட்டது. அதேபோல், எதிரெதிரே வரும் ரெயில் பெட்டிகளை மாற்றுவதற்கு பல்பு லைன் தண்டவாள முறை முதன்முதலில் ஜோலார்பேட்டைரெயில் நிலையம் அருகே உள்ள சாலை நகர், முனீஸ்வரன் கோவில் பகுதியில்தான் அமைக்கப்பட்டது.

ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதிகளில் மாட்டுத்தோல் மற்றும் தக்காளி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1905-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அளித்த எடை ேபாடும் எந்திரம் தற்போதுவரை பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்திலேயே 2-வது மிக நீண்ட ரெயில்வே மேம்பாலம் இங்குதான் உள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றான ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாவதால் ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

70-க்கும் மேற்பட்ட ரெயில்கள்

1845-ம் ஆண்டு மெட்ராஸ் ரெயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது. மேலும் சென்னை ராயபுரம் - வாலாஜா ரோடு ரெயில் பாதை பணி தொடங்கியது. 1856-ம் ஆண்டு ராயபுரம் - வாலாஜா ெரயில் பாதை பணி முடிந்து தென்னகத்தின் முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னர் பெங்களூரு - ஜோலார்பேட்டை இடையே 149 கிலோ மீட்டர் அகல பாதை அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ள ஜாலார் என்ற ஆங்கிலேயர் ஜோலார்பேட்டையில் தங்கி ரெயில்வே பணிகளை மேற்கொண்டார்.

அதன் பிறகு 1864-ம் ஆண்டு ஜோலார்பேட்டை முதல் பெங்களூரு கண்டோன்மென்ட் வரை பணிகள் முடிந்து பெங்களூரு மெயில் ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயில் நிலைய பணிகளை மேற்கொண்ட ஜாலார் என்ற ஆங்கிலேயரின் பெயரை கொண்டுதான் ஜோலார்பேட்டை என்று அழைக்கப்பட்டது. ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், சொர்ணா எக்ஸ்பிரஸ், காட்பாடி பாசஞ்சர், ஈரோடு பாசஞ்சர் ஆகிய ரெயில்கள் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக நாள்தோறும் 70-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் 40-க்கும் மேற்பட்ட சரக்கு ரெயில்களும் இயங்கி வருகிறது.

அடிப்படை வசதி இல்லை

மேலும் இந்த ரெயில் நிலையத்தில் 5 பிளாட்பாரங்கள். சரக்கு ரெயில் செல்ல 2 பிளாட்பாரங்கள் உள்ளன. இது மட்டுமின்றி சரக்கு ரெயில் பழுது பார்க்க 22 இருப்பு பாதைகளும் உள்ளன. மேலும் பயணிகள் தங்குவதற்காக வி.ஐ.பி. அறை ஒன்றும், ஏ.சி. அறை ஒன்றும், ஏ.சி. இல்லாத அறை இரண்டு என மொத்தம் 4 அறைகள் உள்ளன. மேலும் இந்த ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 540 பேர் ரெயிலில் பயணிக்கின்றனர். இதில் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பதிவு மூலம் பயணம் செய்பவர்கள் 4 ஆயிரத்து 291 பேர் ஆகும்.

பயணிகள் மூலமாகவும், அபராதத் தொகை, சரக்கு வாகனம் உள்ளிட்டவைகளின் மூலமும் ஒரு மாதத்திற்கு ஒரு கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 48 ரூபாய் ஜோலார்பேட்டை ரெயில்வே நிர்வாகம் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

மேலும் ஜோலார்பேட்டை அருகே சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ரெயில்களில் வருகின்றனர். இந்தநிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர், கேன்டீன் வசதி, ஓய்வறை, வெயிட்டிங் ஹால் போன்றவைகள் போதுமானதாக இல்லாமல் குறைவான நிலையில் இருந்து வருகிறது. மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் அடிக்கடி குடிநீர் வராமல் போய்விடுவதால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ரெயில் பயணிகள் குடிநீருக்காக ரெயில் நிலையத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.

பயணிகள் கோரிக்கை

ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் எதிரே ரெயில்வே நிர்வாகத்தின் கழிவுநீர் கால்வாய் திறந்த வெளியில் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதால் பயணிகளை முகம் சுளிக்க செய்கிறது. பிளாட்பாரங்கள் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. நடைமேடை நீண்ட தூரம் கடந்து செல்லும் நிலையிலும், பிளாட்பாரங்களுக்கு செல்லும் நடைமேடை படிக்கட்டுகள் உயரமாக இருப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் ரெயில் நிலையத்திற்கு அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வரும் சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் ரெயில் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரியத் தலைவர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரெயில் இயக்குவதற்கான நவீன தொழில்நுட்ப பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் பின்தங்கியே உள்ளது. எனவே ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தமிழகத்தின் இரண்டாவது பெரிய ெரயில் நிலையமான ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை சென்னை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட ரெயில் நிலையங்களை போன்று தரம் உயர்த்த வேண்டும் என ெரயில் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்