சாலைமறியலில் ஈடுபட முயன்ற 150 பேர் கைது
சாலைமறியலில் ஈடுபட முயன்ற 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் அம்மன் கோவிலை இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதாகவும், கோவில் பூட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை ஆர்டிஓ கல்யாண்குமார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பாடததால் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தநிலையில் அதேதரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் நேற்று மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.