செவிலியர் விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக செவிலியர் விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Update: 2022-12-05 20:12 GMT

அண்ணாமலை நகர்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள செவிலியர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு மாணவிகளுக்கு பூரி மற்றும் குருமா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்ட மாணவிகள் 15 பேருக்கு நேற்று காலை திடிரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாணவிகள் அனைவரும் அருகில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. விடுதியை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நாங்கள் பெரும் பாதிப்பு அடைந்து வருகிறோம்.

பேச்சுவார்த்தை

இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி புகார் அளிப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகம் அலுவலகம் அருகே திரண்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த அண்ணாமலை நகர் போலீசார் மற்றும் பேராசிரியர்கள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேராசிரியர்கள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்