வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியை தாக்கி 15½ பவுன் நகை பறிப்பு 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சின்னதிருப்பதியில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்த 2 வாலிபர்கள் மூதாட்டியை தாக்கி 15½ பவுன் நகையை பறித்துசென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கன்னங்குறிச்சி,
வீடு வாடகைக்கு கேட்டு...
சேலம் சின்னத்திருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்தவர் நசீர் ஜஹான் (வயது 82). இவரது கணவர் ஹபீஸ்கான் நெடுஞ்சாலை துறையில் மண்டல பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் இறந்து விட்டதால், கடந்த 10 ஆண்டுகளாக அப்பார்ட்மெண்டில் தனியாக நசீர்ஜஹான் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு கேட்டு நசீர்ஜஹான் வீட்டுக்கு வந்தனர். அப்போது அந்த 2 வாலிபர்கள் வீட்டில் நசீர்ஜஹான் தனியாக வசித்து வருவதை அறிந்து கொண்டனர்.
நகைகள் பறிப்பு
பின்னர் அங்கிருந்து சென்ற அவர்கள், மதியம் 3 மணியளவில் நசீர்ஜஹான் வீட்டுக்கு மீண்டும் வந்தனர். அவர் கதவை திறந்ததும், கண்இமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து நசீர் ஜஹானை தாக்கினார். பின்னர் அவர் அணிந்து இருந்த 15½ பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து அவர் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சின்னதிருப்பதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.