நாமக்கல்லில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
நாமக்கல்லில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எஸ்.பி.கே.நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது45). இவரது மனைவி சசிகலா. இவர்கள் இருவரும் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி (18) என்கிற மகள் உள்ளார். இவர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சசிகலா திருப்பதிக்கு சென்று விட்ட நிலையில், நேற்று முன்தினம் காலையில் கண்ணன் தனது மகளை கல்லூரியில் விட்டுவிட்டு பள்ளிக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்தபோது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
15 பவுன் நகை திருட்டு
இதையடுத்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி சென்றுள்ள சசிகலா வீடு திரும்பினால் தான் திருட்டு போன நகைகள் எவ்வளவு என்பது தெளிவாக தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.