பெண்ணிடம் 15 பவுன் நகை, ரூ.3 லட்சம் மோசடி
மயிலாடுதுறையில் பெண்ணிடம் 15 பவுன் நகை, ரூ.3 லட்சம் மோசடி 2-வது கணவர் கைது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்தவர் சுபாஷினி (வயது 35). ஏற்கனவே திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாப்படுகை சிவன்கோவில் வடக்குத் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணனை(29) 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுபாஷினியிடம் இருந்த நகை, பணத்தை பெற்றுக் கொண்ட ராமகிருஷ்ணன் அவரை சந்திக்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் சுபாஷினி புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கணவர் ராமகிருஷ்ணன் தன்னிடம் 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் பெண்ணிடம் பணம், நகைகளை பெற்று மோசடி செய்ததோடு அவரை ஏமாற்றியதாக ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.