சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
கொல்லிமலை மாற்றுப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேந்தமங்கலம்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அண்டந்தூர் பகுதியை சேர்ந்த 14 பேர் வேனில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு நேற்று சுற்றுலா வந்தனர். வேனை திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த குரு (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். அவர்கள் கொல்லிமலையில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு மாற்றுப்பாதை வழியாக கீழே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மேல் பூசணி குழிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது திடீரென்று வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதை அறிந்த அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தம்மம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.