பயிற்சியில் ஈடுபடுவதற்காக மணிப்பூர் வாள்வீச்சு வீரர்கள் 15 பேர் தமிழகம் வருகை
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த வாள்வீச்சு வீரர், வீராங்கனைகள் 15 பேர், இரு பயிற்சியாளர் என மொத்தம் 17 பேர் தமிழ்நாட்டிற்கு பயிற்சி பெற 13-ந்தேதி வந்துள்ளனர்.
சென்னை,
'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகள் சென்னையில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து மாநில வீரர், வீராங்கனைகள் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அந்த மாநில விளையாட்டு வீரர்களும் முறையான பயிற்சி பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மணிப்பூர் மாநில வீரர்களுக்கு தமிழ்நாட்டில் உயரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த வாள்வீச்சு வீரர், வீராங்கனைகள் 15 பேர், இரு பயிற்சியாளர் என மொத்தம் 17 பேர் தமிழ்நாட்டிற்கு பயிற்சி பெற 13-ந்தேதி வந்துள்ளனர். இவர்களுக்கு உரிய பயிற்சி, தங்குமிடம், உணவு மற்றும் அனைத்து வசதிகளும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.