லாரி இடித்ததால் தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதி 15 பேர் காயம்
சீனிவாசபுரம் ரெயில்வே சுரங்கப்பாலத்தில் சென்ற போது லாரி இடித்ததால் தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதி 15 பேர் காயமடைந்தனர்
பொள்ளாச்சி
சீனிவாசபுரம் ரெயில்வே சுரங்கப்பாலத்தில் சென்ற போது லாரி இடித்ததால் தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதி 15 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
அரசு பஸ்
பொள்ளாச்சி அருகே உள்ள சர்க்கார்பதியில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்கு பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சுரேஷ்குமார் என்பவர் ஓட்டினார். ஜெயகணேஷ் என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 77 பெண்கள் உள்பட 128 பேர் இருந்தனர்.
ஜமீன்ஊத்துக்குளி தாண்டி சீனிவாசபுரம் ரெயில்வே சுரங்கப் பாலத்தில் பஸ் வந்தது. அப்போது திருச்சியில் இருந்து கேரளா மாநிலம் திருச்சூருக்கு சிமெண்டு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது.
15 பேர் காயம்
அப்போது எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி மோதியது. அந்த வேகத்தில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. பஸ்சுக்குள் இருந்த 15 பயணிகள் காயம் அடைந்து கூச்சல் போட்டனர்.
உடனே அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் பொள்ளாச்சி மேற்கு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் டிரைவர் முகமதுஷாலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விதிகளை பின்பற்ற வேண்டும்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு பஸ்சில் 128 பயணிகளை ஏற்றி வந்து உள்ளனர். எனவே சர்க்கார்பதி பகுதிக்கு கூடுதல் பஸ்கள் விட வேண்டும்.
மேலும் ரெயில்வே பாலத்தின் கீழ் வளைவான பகுதியில் லாரியும், பஸ்சும் குறைந்த வேகத்தில் வந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்பட வில்லை.
எனவே ரெயில்வே சுரங்கப்பாலம் போன்ற இடங்களில் செல்லும் போது வாகன ஓட்டுனர்கள் மிகுந்த எச்சரிக்கையாக விதிகளை பின்பற்றி செல்ல வேண்டும் என்றனர்.