நெய்வேலி வன்முறை: கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நேற்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

Update: 2023-07-29 02:56 GMT

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 1956-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தில் சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகிய 3 திறந்தவெளி சுரங்கங்கள் உள்ளன. ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, 4 அனல்மின் நிலையங்கள் மூலமாக ஒரு மணி நேரத்திற்கு 3,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. அறிவித்துள்ளது.

எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கடந்த 26-ந்தேதி என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியது.

விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் 15-க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டு, பரவனாறுக்கு மாற்றுப்பாதை வெட்டும் பணி நடந்தது. இதற்கு விவசாயிகள், பாமக உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் என்எல்சி நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்தனர். அப்போது, இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் நெய்வேலி என்எல்சி நிறுவனம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 28 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யபட்ட 28 பேரில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்