ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 72 தற்காலிக ஆசிரியர் காலி பணியிடம் விண்ணப்பிக்க வருகிற 14-ந்தேதி கடைசி நாள்
கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 72 தற்காலிக ஆசிரியர் காலி பணியிடம் உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வருகிற 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 72 ஆசிரியர்களின் பணியிடம் காலியாக உள்ளன. அதாவது, இடைநிலை ஆசிரியர் 63, பட்டதாரி ஆசிரியர் 5, முதுகலை பட்டதாரி ஆசிரியர் 4 என மொத்தம் 72 காலிப்பணியிடங்கள் உள்ளது.
இது தொடர்பான விவரம் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது.
கல்வித்தகுதி
இதில் ஊதியமாக இடைநிலை ஆசிரியருக்கு ரூ.7 ஆயிரத்து 500, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியருக்கு கல்வி தகுதியாக, ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வாளராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இல்லையெனில் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (TET). இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முன்னுரிமை
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதியாக, ஆசிரியர் முதுகலை ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று மதிப்பெண் சரிபார்ப்பில், கலந்து கொண்டிருக்க வேண்டும்.
பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அந்த ஒன்றியத்திற்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்களை மட்டுமே பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.
14-ந்தேதி கடைசி நாள்
இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல் 2023 மாதம் வரையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள்முதல் பிப்ரவரி 2023 மாதம் வரையிலும், தேர்வு செய்யப்படும். பணி நாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியிடங்களை கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மற்றும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய கல்வித் தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) மாலை.5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.