ரூ.142 கோடியில் கிராமப்புற சாலை பணிகள்-அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.142 கோடியில் கிராமப்புற சாலை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-29 17:13 GMT

செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.142 கோடியில் கிராமப்புற சாலை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

நியாய விலைக்கடை திறப்பு

செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தண்டரை கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடை திறப்பு மற்றும் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா ஆகியவை நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். கலெக்டர் பா.முருகேஷ், செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகா, ஆரணி எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., ஒ.ஜோதி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடைகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கி வினியோகம் செய்வதை தொடங்கி வைத்தார்.

பின்னர் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் தண்டரை கிராமத்தில் இருந்து சுண்டிவாக்கம் வரை சாலை அமைக்கும் பணியினை கடப்பாரையால் மண்ணை தோண்டி தொடங்கி வைத்தார்.

பேட்டி

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் கிராமசாலைகள் திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 281 கிராமசாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு ரூ.142 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 5 வருடங்கள் பராமரித்தல் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கின்ற தரைப்பாலங்கலெல்லாம் மேம்பாலங்களாக மாற்ற வேண்டும் என்றும், இந்த 5 ஆண்டு காலத்திலேயே அவற்றை நிறைவு செய்யப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதால் தற்போது 60 சதவித வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மீதமுள்ள தரைமட்டப் பாலங்கள் உயர் மட்டப் பாலங்களாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் என்.சங்கர், ஜெ.சி.கே.சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

முன்னதாக அமைச்சரை வரவேற்க கட்சி நிர்வாகிகள் அப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கு சில்வர் தட்டு வழங்கி ஆரத்தி எடுக்க ஏற்பாடு செய்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் ஒரு தரப்பு பெண்களுக்கு மட்டும் சில்வர் தட்டு வழங்கப்படுகிறது. எங்களுக்கு ஏன் வழங்காமல் ஒதுக்கி வைக்கிறார்கள் என அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்களின் கூச்சல் அதிகமாகவே வேறு வழி இன்றி மீதமுள்ள எவர்சில்வர் தட்டினை அவர்களுக்கும் வழங்கி வரிசையில் நிற்க வைத்து அமைச்சருக்கு ஆரத்தி எடுக்க வைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்