140 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
உவரியில் 140 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திசையன்விளை:
உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப் -இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உவரி சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 140 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மினி லாரியை ஓட்டிவந்த களியக்காவிளை வேங்கை விளைவீடு பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் அஜின் (வயது 29) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உவரியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அஜினையும், ரேஷன் அரிசி, மினி லாரியையும் போலீசார் நெல்லையில் உள்ள நுகர்பொருள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.