ரெயில்முன் பாய்ந்து 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை:கணவர் உள்பட 2 பேருக்கு 14 ஆண்டு சிறை
ரெயில் முன்பாய்ந்து 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 2 பேருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாகர்கோவில்:
ரெயில் முன்பாய்ந்து 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 2 பேருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வரதட்சணை கொடுமை
தேங்காப்பட்டணம் அருகே உள்ள அம்சி வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் அஜிதா (வயது 30), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்சன் (40) என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 38 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த தம்பதிக்கு ஜெபிசோ அபிஷேக் (4), ஜெபிலோ அபிஷேக் (5) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி நிக்சன் சாமுவேலுக்கு கல்லூரியில் பேராசிரியர் பணிக்காக ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. அதற்காக அஜிதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு ஜெஸ்டின்சன் மற்றும் நிக்சன் சாமுவேல் ஆகியோர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த அஜிதா 20-9-2012 அன்று தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கணவர் வீட்டில் இருந்து வெளியேறினார். அவர் கன்னங்கோட்டில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் வந்த ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயிலில் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அஜிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அஜிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெஸ்டின்சன் மற்றும் நிக்சன் சாமுவேல் ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
14 ஆண்டு சிறை
நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் ஜெஸ்டின்சன் மற்றும் நிக்சன் சாமுவேல் ஆகியோருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதாவது அஜிதாவை தற்கொலைக்கு தூண்டியதற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், வரதட்சணை கொடுமைக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அதில் நீதிபதி கூறி உள்ளார்.
தண்டனை பெற்ற நிக்சன் சாமுவேல் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினார்.