ஈரோட்டில் இருந்து 14 ஒன்றியங்களுக்குவிலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு
ஈரோட்டில் இருந்து 14 ஒன்றியங்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
ஈரோட்டில் இருந்து 14 ஒன்றியங்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
பாடப்புத்தகங்கள்
தமிழ்நாட்டில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கையும் ஆர்வமாக நடந்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்குவதற்காக பள்ளிக்கூடங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
92,359 மாணவ-மாணவிகள்
ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 92 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் பாட நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு ரெயில்வேகாலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் வைக்கப்பட்டன.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களுக்கும் பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. பாடப்புத்தகங்கள் சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதேபோல் முதலாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள பாடப்புத்தகங்களும் ஓரிரு நாட்களில் ஈரோட்டில் இருந்து அந்தந்த ஒன்றியங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.