கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. லாரியை தடுத்து நிறுத்திய தாசில்தாரை முகமூடி அணிந்தவர்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-12-01 19:30 GMT

கர்நாடகத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. லாரியை தடுத்து நிறுத்திய தாசில்தாரை முகமூடி அணிந்தவர்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி பறக்கும்படை தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கிருஷ்ணகிரி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுகிறதா? என கண்காணித்தனர்.

இந்த நிலையில் அவர்கள் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 280 மூட்டைகளில் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.

டிரைவர் பிடிபட்டார்

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருவண்ணாமலை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் நிறுத்தினார்கள். தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த திருப்பத்தூர் மாவட்டம் வெலகல்நத்தம் அருகே உள்ள ஜி.எஸ். வட்டம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 34) என தெரிய வந்த-து.

அவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாசில்தாருக்கு கொலை மிரட்டல்

இந்த நிலையில் லாரியை பின் தொடர்ந்து முகமூடி அணிந்த நபர்கள் நுகர்பொருள் வாணிப கிடங்கு முன்பு வந்தனர். அவர்கள் லாரியை வெளியே விடாவிட்டால் கொலை செய்து விடுவோம் என தாசில்தார் இளங்கோவனுக்கு மிரட்டல் விடுத்தனர். இது குறித்து தாசில்தார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் முகமூடி அணிந்து வந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்