புகையிலை பொருட்கள் விற்ற 14 கடைகளுக்கு அபராதம்

வடசித்தூரில் பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 14 கடைகளுக்கு அபராதம் விதித்து சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்தனர்

Update: 2022-06-24 16:36 GMT

கிணத்துக்கடவு

வடசித்தூரில் பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 14 கடைகளுக்கு அபராதம் விதித்து சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அதிகாரிகள் சோதனை

கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் பகுதியில் அரசு பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ராவுக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து வடசித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவச்சந்திரன் தலைமையில்   குழுவினர் வடசித்தூர் பகுதியில் பெட்டி கடைகள், பேக்கரிகள், பள்ளிக்கூடம் அருகே உள்ள பெட்டிக் கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அபராதம்

அப்போது பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதும், பள்ளிக்கூடம் அருகில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சுகாதாரத்துறையினர் அந்த டை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:-

பள்ளிக்கூடம் அருகில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்க கூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது.

மேலும் கடைகள் முன்பு புகையிலை, சிகரெட் படங்கள் விளம்பரங்கள் பற்றிய துண்டுபிரசுரங்கள் ஒட்டி இருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

நேற்று நடைபெற்ற சோதனையில் வடசித்தூர் பகுதியில் உள்ள 14 கடைகளுக்கு ரூ.3,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வியாபாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்