ரூ.14½ லட்சத்தில் 100 பேருக்கு நலத்திட்ட உதவி-கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்
நாங்குநேரி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் 100 பேருக்கு ரூ.14½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் 100 பேருக்கு ரூ.14½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
கிராம சபை கூட்டம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கோவிலம்மாள்புரம் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் முகமது சபீர், பயிற்சி உதவி கலெக்டர் கிஷன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் உரிமை திட்டம், ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 100 பேருக்கு ரூ.14 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். முகாமில் 241 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது. இதில் 132 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 109 மனுக்கள் பரிசிலனையில் உள்ளது.
முகாமில் சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர் அனிதா, வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த், பஞ்சாயத்து தலைவர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.