நவீன வசதிகளுடன் ரூ.14½ கோடியில் காய்கறி சந்தை

மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன் நவீன வசதிகளுடன் ரூ.14½ கோடியில் புதிய காய்கறி சந்தை அமைய உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

Update: 2023-07-13 18:45 GMT

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன் நவீன வசதிகளுடன் ரூ.14½ கோடியில் புதிய காய்கறி சந்தை அமைய உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காய்கறி சந்தை

குமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பஸ் நிலையத்திற்கு முன் கருங்கல் சாலையில் 2.37 ஏக்கர் பரப்பளவில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது 247 கடைகள் அங்கு உள்ளன. இந்த சந்தையில் உள்ள கடைகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் நெருக்கடி நேரத்தில் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு போதுமான இடவசதி இல்லை. கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன.

திட்ட அறிக்கை

எனவே அவை அனைத்தையும் இடித்து விட்டு புதிதாக 196 கடைகளும், ஆண் மற்றும் பெண்களுக்கான தனி கழிவறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற நவீன வசதிகளுடன் புதிய காய்கறி சந்தை கட்டுவதற்கு ரூ.14.60 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று மார்த்தாண்டத்தில் புதிய காய்கறி சந்தை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்