மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் ரூ.14 கோடி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் லலிதா கூறினார்.

Update: 2022-06-25 12:24 GMT

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் லலிதா கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குறுவை தொகுப்பு திட்டம்

2022-ஆம் ஆண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டம் டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், நெல் விதைகள் மற்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கான விதைகள் மற்றும் பிற பொருட்கள் வழங்குவதற்காக ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 466 மதிப்பிலான ஒரு மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி. மற்றும் 25 கிலோ பொட்டாஷ் அடங்கிய உரத்தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்பட உள்ளது. மேலும் விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.17.50 வீதம் 565 டன் விதைகள் 28 ஆயிரத்து 250 ஏக்கருக்கு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உள்ளது.

சிறுதானிய பயிர்கள்

குறுவை பருவத்தில் பலவை பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு 50 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரிகள், உயிர் உரங்கள் ஆகிய இடுபொருட்கள், விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத்தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.810 வரையிலும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.930 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது.

குறுவையில் பயறுவகை சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக 500 ஏக்கரில் உளுந்து பயிரிடும், பொது விவசாயிகளுக்கு விதைகள், இலை வழி உரச்சத்து மற்றும் அறுவடை ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 50 சதவீத மானியமாக ரூ.1,250-ம், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.1570-ம் வழங்கப்பட உள்ளது.

எண்ணெய் வித்து பயிர்கள்

குறுவை பருவத்தில் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி, நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருட்களுக்காக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4000 வரையிலும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.5600 வரையிலும் வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்