இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 137 பேர் கைது
திருச்சியில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 137 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திருச்சியில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 137 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ரெயில் மறியல் முயற்சி
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், இந்தி திணிப்பு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து 12, 13, 14-ந் தேதிகளில் 3 நாட்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலுக்காக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மாவதி தலைமையில், கவுன்சிலர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கட்சி கொடிகளுடன் திரண்டு வந்தனர். அவர்களை ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகே இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் முன்னேறி சென்றனர்.
137 பேர் கைது
இதையடுத்து ரெயில் நிலைய வளாகத்துக்குள் மற்றொரு இடத்தில் இரும்பு தடுப்பு களை வைத்து போலீசார் தடுத்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதையும் தள்ளிக்கொண்டு ரெயில்நிலையத்துக்குள் செல்ல முயன்றதால் போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பெண்கள் சிலர் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தியபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 65 பெண்கள் உள்பட 137 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.