நெல்லை மாவட்டத்தில் 13.65 லட்சம் வாக்காளர்கள்

நெல்லை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 13.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 7,055 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2023-01-05 18:37 GMT

நெல்லை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 13.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 7,055 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு வாக்காளர் பட்டியலை வெளியிட மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார். இதில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சபீர் முகமது ஆலம், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், தேர்தல் தாசில்தார் கந்தப்பன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

13.65 லட்சம் பேர்

பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

1.1.2023-யை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை தொகுதியில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 623 வாக்காளர்களும், அம்பை தொகுதியில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 282 வாக்காளர்களும், பாளையங்கோட்டை தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 763 வாக்காளர்களும், நாங்குநேரி தொகுதியில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 679 வாக்காளர்களும், ராதாபுரம் தொகுதியில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 285 வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 65 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக நெல்லை சட்டமன்ற தொகுதியில் புதிதாக 5 ஆயிரத்து 97 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் 229 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ராதாபுரம் தொகுதியில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 220 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் 4 ஆயிரத்து 100 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 7,055 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம்

நெல்லை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 108 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 53 ஆயிரத்து 450 பெண் வாக்காளர்களும் உள்ளனர். அம்பை தொகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 279 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 994 பெண் வாக்காளர்களும், பாளையங்கோட்டை தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 813 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 920 பெண் வாக்காளர்களும் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 55 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 609 பெண் வாக்காளர்களும், ராதாபுரம் தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 792 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 478 பெண் வாக்காளர்களும் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 47 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 97 ஆயிரத்து 451 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 134 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளது. அதே போல் நெல்லை மாவட்டத்தில் 60 சதவீதம் பேர் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து உள்ளனர்.

வாக்குச்சாவடிகள்

நெல்லை தொகுதியில் 309 வாக்குச்சாவடிகள், அம்பை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள், பாளையங்கோட்டை தொகுதியில் 269 வாக்குச்சாவடிகள், நாங்குநேரி தொகுதியில் 306 வாக்குச்சாவடிகள், ராதாபுரம் தொகுதியில் 306 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,484 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலை தாசில்தார் அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆகியவற்றில் வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்த்து கொள்ளலாம். இது தொடர்பான புகார்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு 0462 2501181, நெல்லை உதவி கலெக்டர் அலுவலகம் 0462 2501333, சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம் 0463 4260124, நெல்லை மாநகராட்சி அலுவலகம் 0462 2329328 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்