இணையவழி கடன் செயலி மூலம் ரூ.1.35 லட்சம் மோசடி; 2 பேர் கைது

தூத்துக்குடியில் இணைய வழி கடன் செயலி மூலம் ரூ.1.35 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-15 18:45 GMT

தூத்துக்குடியில் இணைய வழி கடன் செயலி மூலம் ரூ.1.35 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடன் செயலி

கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சவுந்தரராஜன். இவர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி மோன்ஷோ என்ற பெயரில் இணையதள வழி கடன் செயலி விளம்பரம் இருந்ததை பார்த்துள்ளார். அவருக்கு கடன் தேவைப்பட்டதால் அதில் இருந்த இணைப்புக்குள் சென்று, இணைய வழி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயர், முகவரி, வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை பதிவு செய்து ரூ.3 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளார்.

அதன் பின்னர் சவுந்தரராஜன் செல்போன் எண்ணிற்கு, ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர், அவரிடம் கடன் ஏற்பாடு செய்வதாக பல்வேறு காரணங்களை கூறி ரூ.1.35 லட்சம் பெற்றுள்ளார்.

போலீசில் புகார்

பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அந்த நபரை சவுந்தரராஜனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை சவுந்தரராஜன் அறிந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரூ.45 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என ரூ.75 ஆயிரத்தை சவுந்தரராஜன் ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்த நபரின் வங்கி கணக்கு தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் தனியார் வங்கியில் உள்ளது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வங்கிக்கு சென்று போலீசார் விசாரணை செய்தபோது, பணம் மோசடி செய்த நபரின் மற்றொரு செல்போன் எண் கிடைத்தது.

2 பேர் கைது

அந்த செல்போன் எண்ணின் முகவரி தென்காசி மாவட்டம் வெள்ளக்கால் பகுதியைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 27) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த செல்போன் எண் சிக்னல் மூலம் பாலசுப்பிரமணியனை தேடியபோது அவர் தூத்துக்குடியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பாலசுப்பிரமணியனுக்கு பணத்துக்காக போலியான நிறுவனம், போலியான வங்கி கணக்குகள் உருவாக்கி குற்றத்துக்கு உடந்தையாக இருந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தலைவன்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துராஜ் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் பயன்படுத்திய 3 வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் இவர்கள் 2 பேரும் நாடு முழுவதும் பலரிடம் ஏமாற்றி ரூ.4 கோடிக்கு மேல் மோசடி செய்ததும் தெரியவந்தது. இவர்களின் குற்ற செயலுக்கு உடந்தையாக பலர் இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன், முத்துராஜ் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்