தென்காசி மாவட்டத்தில் 13.21 லட்சம் வாக்காளர்கள்

தென்காசி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆகாஷ் நேற்று வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 13.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

Update: 2023-01-05 18:45 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அதனை தி.மு.க. கலை இலக்கிய பிரிவு பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ராமராஜா, அ.தி.மு.க. சார்பில் கனகசபாபதி, காங்கிரஸ் சார்பில் சந்தோஷ் மற்றும் பல்வேறு கட்சியினர் பெற்றுக் கொண்டனர். பின்னர் கலெக்டர் ஆகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1,19,099 ஆண் வாக்காளர்கள், 1,25,991 பெண் வாக்காளர்கள், 7 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,45,097 வாக்காளர்களும், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1,17,626 ஆண் வாக்காளர்கள், 1,22,944 பெண் வாக்காளர்கள், 7 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,40,577 வாக்காளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 1,39,515 ஆண் வாக்காளர்கள், 1,41,878 பெண் வாக்காளர்கள், 13 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,81,406 வாக்காளர்களும் உள்ளனர்.

தென்காசி தொகுதியில் 1,43,519 ஆண் வாக்காளர்கள், 1,50,239 பெண் வாக்காளர்கள், 66 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,93,824 வாக்காளர்களும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 1,26,598 ஆண் வாக்காளர்கள், 1,33,974 பெண் வாக்காளர்கள், 13 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,60,585 வாக்காளர்களும் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 6,46,357 ஆண் வாக்காளர்கள், 6,75,026 பெண் வாக்காளர்கள், 106 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13,21,489 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். 5 தொகுதிகளில் அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதி தென்காசி ஆகும். குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதி வாசுதேவநல்லூர். மாவட்டத்தில் மொத்தம் 1,506 வாக்குச்சாவடிகள் உள்ளன.

கடந்த நவம்பர் 9-ந்்தேதி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட மாறுதலுக்கு 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்