லாரியில் கடத்தி வந்த 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
லாரியில் கடத்தி வந்த 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
லால்குடி ரவுண்டானா அருகே உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த லாரியில் மூட்டை, மூட்டையாக 13 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. டிரைவரிடம் விசாரித்தபோது, அரிசி கொண்டு வந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த டிரைவர் முசிறி வாளசிராமணியை சேர்ந்த ஜெயக்குமாரை (வயது31) கைது செய்தனர். மேலும், நாகப்பட்டினத்தை சேர்ந்த அரிசி உரிமையாளர் சங்கரநாராயணன் என்பவரை தேடி வருகிறார்கள்.