சந்தேகத்துக்குரிய 13 பேர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்ட சந்தேகத்துக்குரிய 13 பேர் நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். வழக்கு விசாரணை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-11-01 20:03 GMT

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்ட சந்தேகத்துக்குரிய 13 பேர் நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். வழக்கு விசாரணை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராமஜெயம் கொலை வழக்கு

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை திருச்சி தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி திருச்சி-கல்லணைரோட்டில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி ஆற்று கரையோரம் வீசி சென்று இருந்தனர்.

திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் 12 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. 5 ஆண்டுகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

ஆனாலும் கொலையாளிகள் யார்? என்பது தெரியாததால் கோர்ட்டு உத்தரவுப்படி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்று இருந்தனர்.

சிறப்பு புலனாய்வுக்குழு பல மாதங்களாக நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட மாடல் காரில் ராமஜெயத்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அதே மாடல் கார்களை தமிழகம் முழுவதும் பயன்படுத்தி வந்த உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் என 1,500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரபல ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார்கள்.

13 பேருக்கு சம்மன்

இதில் சந்தேகத்துக்குரிய 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் திட்டமிட்டனர். இதற்காக திருச்சியை சேர்ந்த சாமி ரவி, திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், கணேசன், மாரிமுத்து, சத்யராஜ், தினேஷ், லட்சுமிநாராயணன், சண்முகம், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேருக்கும், சம்மன் அனுப்பப்பட்டது. இதேபோல் கடலூர் மத்திய சிறையில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

கோர்ட்டில் ஆஜர்

இவர்கள் 13 பேரும் நேற்று காலை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஆட்சேபனை இருப்பின் அதை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என்றும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, சாமி ரவி, திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், கணேசன், மாரிமுத்து, சத்யராஜ், தினேஷ், லட்சுமிநாராயணன், சண்முகம், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரும் நேற்று காலை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் மாஜிஸ்திரட்டு சிவக்குமார் முன்னிலையில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

கடலூர் மத்திய சிறையில் இருந்து செந்தில்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 13 பேர் தரப்பில் ஆஜர் ஆன வக்கீல்கள், 13 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தான், அனுமதி கோரி மனு தாக்கல் செய்யமுடியும். ஆனால், துணை போலீஸ் சூப்பிரண்டு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர்.

குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும்

மேலும், இறந்துபோன ராமஜெயத்தின் குடும்பத்தினரை சந்தேகப்பட்டு மீண்டும் விசாரணை மேற்கொள்ளவில்லை. அவர்கள்தான் முன்பு நடத்தப்பட்ட விசாரணைகளில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவே இவர்களை அழைத்துள்ளனர்.

எனவே போலீஸ் சூப்பிரண்டுவை மனு தாக்கல் செய்யும்படி கூறுங்கள். இவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். அதுவரை இவர்கள் 13 பேரையும் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என்று வக்கீல்கள் வாதாடினர்.

7-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

இதைத்தொடர்ந்து வழக்கை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட்டு சிவக்குமார், அன்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீண்டும் மனு தாக்கல் செய்யவும், அன்று அனைவரும் ஆஜர் ஆகவும் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, 13 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடக்கோரி வருகிற 7-ந்தேதி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் பிரபல ரவுடிகள் 13 பேரிடமும் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பதாகவும், அப்போது, வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சோதனை

இதற்கிடையே நேற்று கோர்ட்டுக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் வந்ததால் அவர்களின் ஆதரவாளர்கள் அல்லது எதிரிகள் ஆயுதங்கள், வெடிகுண்டு எதுவும் எடுத்து வந்துள்ளார்களா? என்று வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சந்தேகப்படும் அனைவரையும் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்