13 பஞ்சாயத்து தலைவர்கள் கனிமொழி எம்.பியுடன் சந்திப்பு
பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக கூறப்பட்ட 13 பஞ்சாயத்து தலைவர்கள் கனிமொழி எம்.பியை புதன்கிழமை சந்தித்தனர்.
பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக கூறப்பட்ட 13 பஞ்சாயத்து தலைவர்கள் கனிமொழி எம்.பியை நேற்று சந்தித்தனர்.
பஞ்சாயத்து தலைவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 18 பஞ்சாயத்து தலைவர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் அறிவிப்புகள் வெளியானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கட்சியில் இணைந்ததாக கூறப்பட்ட 13 பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்குக்கு வந்தனர்.
சந்திப்பு
அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தனர். அப்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர்கள் கூறும் போது, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் தொடர்பாக மனு கொடுக்க சென்றவர்களை பா.ஜனதா கட்சியில் இணைந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர் என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.