13 ஆடுகளை கடித்து கொன்ற வெறிநாய்கள்
கடையம் அருகே 13 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றது
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பட்டவீராசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாணல்குளம் தெற்கு தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் ஜெயக்கொடி (வயது 59). இவர் 22 ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது மனைவி பூமாரி, ஆடுகளை நாணல்குளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தினமும் மேய்த்து விட்டு வருவது வழக்கம்.
இதேபோல் நேற்று மதியம் தனது கணவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக ஆடுகளை தோட்டத்தில் அடைத்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் சென்று பார்த்தபோது 22 ஆடுகளில் 13 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றது தெரியவந்தது. இதை கண்ட அவர் கதறி அழுதார். அக்கம்பக்கத்தினர் அவருக்கு ஆறுதல் கூறினர். இதுபற்றி ஆழ்வார்குறிச்சி போலீசார் உள்ளிட்டோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.