முட்டம் அருகே விசைப்படகு உடைந்து ஆழ்கடலில் பரிதவித்த 13 மீனவர்கள் மீட்பு

முட்டம் அருேக விசைப்படகு உடைந்து ஆழ்கடலில் பரிதவித்த 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2023-01-28 22:15 GMT

ராஜாக்கமங்கலம்:

முட்டம் அருேக விசைப்படகு உடைந்து ஆழ்கடலில் பரிதவித்த 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ஆழ்கடலில் மீன்பிடிக்க...

குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியை சேர்ந்தவர் லூக்காஸ் (வயது44) மீனவர். இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவரும், தூத்துக்குடியை சேர்ந்த 2 பேர், கொல்லம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த தலா ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 5 பேர், ஒடிசாவை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 13 மீனவர்கள் கொல்லம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர். படகை லூக்காஸ் ஓட்டினார்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதியில் 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது.

படகு உடைந்தது

இதனால் படகு உடைந்து கடல் நீர் உள்ளே புகுந்தது. உடனே, மீனவர்கள் படகில் புகுந்த நீரை வெளியேற்ற முயன்றனர். ஆனால், நீர் தொடர்ந்து படகுக்குள் வந்து கொண்டே இருந்தது. இதனால் லூக்காஸ் படகை கரை நோக்கி இயக்கினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் படகு எதிர் திசையில் அடித்து செல்லப்பட்டது. இதனால் படகை கட்டுப்படுத்த முடியாமல் மீனவர்கள் பரிதவித்தனர்.

ஒரு கட்டத்தில் கரையில் இருந்து 8 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் வந்த போது அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகை லூக்காஸ் உதவிக்கு அழைத்தார். பைபர் படகு அருகில் வந்ததும் விசைப்படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அதில் ஏறி அமர்ந்தனர். அதிக பாரம் காரணமாக பைபர் படகை அதே இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தியிருந்தனர்.

மீனவர்கள் விரைந்தனர்

பின்னர், நேற்று காலையில் லூக்காஸ் மட்டும் மற்றொரு பைபர் படகில் ஏறி தேங்காப்பட்டணம் துறைமுகம் வந்து சேர்ந்தார். தொடர்ந்து ஆழ்கடலில் விசைப்படகு உடைந்து வெள்ளம் புகுந்ததையும், அதில் இருந்த மீனவர்கள் வேறொரு பைபர் படகில் அமர்ந்து இருப்பதையும் உறவினர்களுக்கு தெரிவித்தார்.

உடனே வாணியக்குடி மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் ஆழ்கடலுக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் லூக்காசின் விசைப்படகை சென்றடைந்தனர். பின்னர் உடைந்த விசைப்படகையும், அதன் அருகே பைபர் படகில் அமர்ந்திருந்த 12 மீனவர்களையும் மீட்டு கரையை நோக்கி புறப்பட்டனர்.

இவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் முட்டம் துறைமுகத்தில் கரை சேர்வார்கள் என மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்புவதை அறிந்த உறவினர்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்