தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 127 செல்போன்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 127 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2022-08-22 11:08 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன 127 செல்போன்களை போலீசார் மீட்டனர். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.

செல்போன் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

அதன்படி செல்போன்கள் எங்கெங்கு பயன்படுத்தப்படுகின்றன? என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 127 செல்போன்களை போலீசார் மீட்டனர். ஏற்கனவே 553 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 680 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன.

ஒப்படைப்பு

நேற்று காலையில் மீட்கப்பட்ட 127 செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கி பேசினார்.

அப்போது, செல்போன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும். சமூக வலைதளங்களில் வரும் வேலைவாய்ப்பு சம்பந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஆன்லைனில் டிரேடிங் கம்பெனி மூலம் அதிக லாபம் பெறலாம் என்று வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். தற்போது போலீஸ் உயர் அதிகாரிகள் போன்றும், தங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் போன்றும் தொடர்பு கொண்டு பரிசு கூப்பன் விழுந்து உள்ளதாக கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற வேண்டாம். மேற்படி ஏதேனும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிக கவனமுடன் செயல்பட்டு சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

போலீசாருக்கு பாராட்டு

தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாராட்டினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்