நடப்பு கல்வியாண்டில் 12,675 மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை

கடலூர் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 12,675 மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-08-28 18:45 GMT

வீடு வீடாக கணக்கெடுப்பு

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை தவிர, 1,716 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குழந்தைகள் பள்ளி செல்லாமல், இடைநிற்பதை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் செல்போன் செயலி, இணைய பயன்பாடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று இடைநின்ற மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

செயலியில் பதிவேற்றம்

அதாவது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி மேற்பார்வையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் தலைமையில் 11,648 ஆசிரியர்கள், 113 ஆசிரியர் பயிற்றுநர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முதற்கட்டமாக பள்ளிகளில் இடைநின்ற மாணவ-மாணவிகளின் பட்டியலை சேகரிக்கிறார்கள். பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் உதவியுடன் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து வருகின்றனர். அப்போது இடைநின்ற மாணவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் முறையாக ஆவணப்படுத்தி சர்வே என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்கிறார்கள். மேலும் பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களின் புகைப் படங்களையும் பதிவேற்றம் செய்கிறார்கள்.

விருப்பமில்லாத மாணவர்கள்

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை கணக்கெடுக்கப்பட்டதில், 3,916 இடைநின்ற மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இடைநின்ற மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் அடிப்படையில், அவர்களில் 1592 பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இடைநின்ற மாணவர்களில் சுமார் 200 முதல் 300 பேர் தாங்கள் படிப்பை தொடர விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர்.

பள்ளிசெல்லாமல் இடைநின்ற 930 மாணவர்கள், மீண்டும் படிப்பை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கடந்த கல்வி ஆண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படித்துதுவிட்டு, நடப்பு கல்வியாண்டில் இதுவரை 12 ஆயிரத்து 675 பேர் மேற்படிப்பை தொடராமல் உள்ளனர். இவர்களில் 897 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பேரில் 420 பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் தொழிற்பயிற்சி உள்ளிட்ட பிற படிப்புகளில் சேர உள்ளார்களா? அல்லது வேலைக்கு சென்று விட்டார்களா? என்பது குறித்த விவரம் கணக்கெடுப்பு முடிந்த பிறகே தெரியவரும்.

எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்

இதற்கிடையே பள்ளிசெல்லா இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கும் ஆசிரியர்கள், அவர்களது வீடு மற்றும் அவர்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு சென்று அறிவுரை கூறி வருகின்றனர். இதில் சில பெற்றோர், தங்கள் குழந்தைகளை வேலைக்கு செல்லவிடாமல் படிக்க வைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி பள்ளியில் சேர்க்க மறுக்கின்றனர். மேலும் சிலர் ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக மாவட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி பகுதியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தற்போது தங்களுக்கு கணக்கெடுப்பு பணியின் போது போலீஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்வாதாரத்திற்காக வேலை

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 8 மற்றும் 10-ம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் மேற்படிப்பை தொடருவதில்லை. அதிலும் கிராமப்புறங்களை காட்டிலும், நகர பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் தான் அதிகளவில் மேற்படிப்பை தொடராமல் உள்ளனர்.

இடைநின்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் விசாரித்ததில், பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்திற்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதாக கூறுகின்றனர். தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமலும், பாதியில் படிப்பை கைவிடுகின்றனர். மேலும் குழந்தை திருமணம், பிற மாவட்டங்களுக்கு இடம்பெயருதல், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் போது, மாற்றுத்திறனாளிகள், உடல்நிலை பாதிக்கப்பட்டு நீண்ட நாள் விடுப்பில் இருந்தவர்கள் தான் அதிகளவில் பள்ளிக்கு செல்ல மறுக்கின்றனர். இவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் வேலைக்கு செல்வதால் மீண்டும் பள்ளியில் சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் குறித்து சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். நடப்பு கல்வியாண்டில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி வரை இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இந்த பணி முடிந்ததும், இடைநின்ற மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்