126 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல்
மணப்பாறை பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 126 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதில் ஒரு ஓட்டலில் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மணப்பாறை பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 126 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதில் ஒரு ஓட்டலில் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
126 கிலோ இறைச்சி பறிமுதல்
மணப்பாறை பகுதியை சுற்றியுள்ள அசைவ உணவு விற்பனை செய்யும் 12 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி மற்றும் சமைத்த அசைவ உணவுகள் மற்றும் புற்றுநோய் வரவழைக்கக்கூடிய அதிக நிறமி சேர்க்கப்பட்ட அசைவ உணவுகள்மற்றும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 126 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் நோட்டீசு கொடுக்கப்பட்டது. அதில் 5 கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கு போடுவதற்காக 3 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக விற்பனை நிறுத்தம்
மேலும் அங்கிருந்த ஒரு உணவகத்தின் சமையலறை மிகவும் அசுத்தமான நிலையில் இருந்தது கண்டறியப்பட்டு அந்த உணவகத்தில் தற்காலிகமாக உணவு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு, அதனை சரிசெய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி வையம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரி டீ ஸ்டால் கடையில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து, தொடர் அபராதங்கள் செலுத்தியபோதும், தொடர்ந்து விற்பனை செய்ததால் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா அவசர தடையாணை உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் அந்த கடைக்கு `சீல்' வைத்தனர்.