ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது..!

மலர் கண்காட்சி இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

Update: 2023-05-19 05:46 GMT

ஊட்டி,

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதேபோல் நடப்பாண்டில் கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த 6-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. மலர் கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மலர் கண்காட்சி இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், கிரைசாந்திமம் உள்பட பல்வேறு வகை மலர் செடிகள் 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டன. இதேபோல் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் என 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5½ லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.

இந்த செடிகளில் தற்போது பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு தேசிய பறவையான மயில் உருவம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில சின்னங்களான வரையாடு, மரகதப்புறா, பனைமரம் போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் இடம்பெறுகிறது.

குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில், 175-வது ஆண்டு தாவரவியல் பூங்கா மற்றும் 125-வது மலர் கண்காட்சி என மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர மலர் மாடத்தில் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகிறது.

சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார். கண்காட்சியை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்