சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சுப முகூர்த்த தினத்தையொட்டி இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை,
தொடர் விடுமுறை நாட்கள், பொது விழாக்கள், கூபமுகூர்த்த நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வரும் 20-ந்தேதி மற்றும் 21-ந்தேதி ஆகிய தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு, 18-ந்தேதி (இன்று) 19-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும், கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 18-ந்தேதி (இன்று) கூடுதலாக 500 சிறப்பு பஸ்களும், 19-ந்தேதி (நாளை) 350 பஸ்களும் இயக்கப்படும்.
மேலும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,250 பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.
கட்டண சலுகை
இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது. சிறப்பு பஸ் இயக்கப்படுவதை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் ஒரே தடத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக, அடுத்து வரும் தொடர் பயணங்களுக்கு அதாவது 6-வது பயணம் முதல் 50 சதவீத கட்டணச்சலுகை அளிக்கப்படுகிறது.
இதன்படி இத்திட்டத்தின் மூலம் மே 8-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை 1,682 பயணிகளுக்கு இச்சலுகை வழங்கப்பட்டு உள்ளது. மேற்கூறிய சலுகையை பெற பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.