ஆவடியில் 1247 சி.ஆர்.பி.எப் காவலர்கள் பயிற்சி நிறைவு விழா
ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 1247 சி.ஆர்.பு.எப் வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது
ஆவடி:
சென்னை, ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) பயிற்சி மையத்தில் ஆந்திரா, சட்டீஸ்கர், டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த 1247 பேர் காவலர்களுக்கான பயிற்சி பெற்றனர்.
அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று காலை ஆவடி சி.ஆர்.பி.எப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் பயிற்சி மைய முதல்வர் மற்றும் டி.ஐ.ஜி கேவல்சிங் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சி.ஆர்.பி.எப் தெற்கு மண்டல ஏ.டி.ஜி சத்ருவேதி கலந்துகொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
இவர்களுக்கு பயிற்சி மையத்தில் 44 வாரங்கள் கடின பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் 4 வாரங்கள் அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் பயிற்சியின் ஒரு அங்கமாக 7 நாட்களுக்கான உளர் உணவு பொருட்களுடன் கூடிய காடுகளில் தங்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் இந்த பயிற்சி முகாமில் 8 நிலைக் கொண்ட 25, 50, 100 மற்றும் 200 மீட்டர் தொலைவில் துல்லியமாகக் குறி பார்த்து துப்பாக்கி சுடும் பயிற்சி, உடலை கட்டுக்கோப்பாக வைக்க நவீன வசதிகள் கொண்ட உடற்பயிற்சி, ஓடுதளம் மற்றும் நீச்சல் குளம் பயிற்சி ஆகிய பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்பட்டது.
பயிற்சி முடித்து வெளியே செல்லும் வீரர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப் துணை கமாண்டன்ட் சந்திரசேகரன், கவாத்து கமாண்டர் சரவணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.