கோத்தகிரியில் 1,200 மணல் மூட்டைகள் தயார்

கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 1,200 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-11 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 1,200 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மலைப்பிரதேசம் என்பதால், பருவமழை காலங்களில் மண் சரிவு, நிலச்சரிவு, வீடுகள், மரங்கள் சரிந்து விழுதல் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களின் வீடுகள் மற்றும் உடமைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடரை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துத் துறை அதிகாரிகளை கொண்டு உள்ளடக்கிய குழுக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் முதல்நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி நெடுஞ்சாலை துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆகிய துறைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை சார்பில், மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

1,200 மணல் மூட்டைகள்

அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி சார்பில், நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபடாமல் இருக்கவும், குடியிருப்புகள் பாதிக்காமல் இருக்கவும், 1,200 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த மணல் மூட்டைகள் பேரூராட்சி அலுவலக வளாகம் அருகே அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கூறும்போது, வடகிழக்கு பருவமழையை சமாளிக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது 1,200 மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

இதில் ஆயிரம் மணல் மூட்டைகள் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் முன் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் மேலும் ஆயிரம் மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்