குமாி பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்

குமாி பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபட்டனர்.

Update: 2022-10-22 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை 'களை' கட்டியது. பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடை வாங்கவும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்து வருகிறார்கள்.

இதனால் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக தலை நகரான நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் அதிகளவு மக்கள் கூட்டம் இருக்கிறது.

அதிலும் நேற்று அதிகமாக கூட்டம் இருந்தது. செம்மாங்குடி ரோட்டில் நடந்து செல்லவே இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் இருந்தது. இதே போல அவ்வை சண்முகம் சாலை, கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதி, செட்டிகுளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

போக்குவரத்து நெரிசல்

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்ததால் நாகர்கோவிலில் நேற்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. வடசேரி ஆராட்டு ரோடு, கேப் ரோடு, ஒழுகினசேரி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்தபடி சென்றன.

கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் அதை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறக்கூடிய அபாயம் உள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்களுக்கு அடிக்கடி போலீசார் ரோந்து சென்றனர். செம்மாங்குடி சாலையில் இருபுறமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1,200 போலீசார்

மேலும் குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ரெயில் நிலையங்கள், ரெயில்வே பாலங்களிலும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவாமல் தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

=========

Tags:    

மேலும் செய்திகள்