கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி மருந்துகள் அழிப்பு
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி மருந்துகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழித்தனர்.
கோவை,
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் வெடித்தது. இதில் அந்த காருக்குள் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 45 கிலோ வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
வெடிமருந்துகள் பறிமுதல்
கார் வெடிப்பு தொடர்பாக கைதாகி சிறையில் இருக்கும் 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் ஜமேஷாமுபின் வீடு உள்பட 2 இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி மருந்துகள் வெடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக அவற்றை ஆய்வகத்துக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிந்ததும் அந்த பொருட்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அதிகாரிகள் கோவையில் உள்ள முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதையடுத்து அவற்றை அழிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் நேற்று கோவை வந்தனர். பின்னர் அவர்கள் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைத்திருந்த வெடிமருந்துகளை, வெடிபொருட்கள் எடுத்துச்செல்லும் சிறப்பு வாகனத்தில் கோவை மாவட்டம் சூலூர் அருகே வாரப்பட்டி கந்தம்பாளையத்தில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான வெடிமருந்து குடோனுக்கு எடுத்துச்சென்றனர்.
அழிக்கப்பட்டது
அங்கு 120 கிலோ வெடிமருந்துகள் அனைத்தும் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அந்த குடோனில் பெரிய அளவில் குழி தோண்டினார்கள். அதைத்தொடர்ந்து சல்பர் பவுடர் மற்றும் வெடிமருந்துகளை மணலில் கலந்து தீயிட்டு அழித்தனர்.
இந்த மருந்துகளை அழிக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடோனில் வேலை செய்யும் ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடிமருந்துகள் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.