துறையூரில் 2 நகைக்கடைகளில் 12 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

துறையூரில் பூட்டை உடைத்து 2 நகைக்கடைகளில் 12 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது. இதேபோல் கோவிலிலும் திருட்டு முயற்சி நடைபெற்றது.

Update: 2022-11-23 19:23 GMT

துறையூரில் பூட்டை உடைத்து 2 நகைக்கடைகளில் 12 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது. இதேபோல் கோவிலிலும் திருட்டு முயற்சி நடைபெற்றது.

நகைக்கடைகள்

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர்கள் பாஸ்கர், பிரபு. இவர்கள் துறையூர் ஆலமரம் சந்து பகுதியில் தனித்தனியாக நகைக்கடைகள் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு விற்பனை நேரம் முடிந்ததும் இவர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் 2 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதை பார்த்த அப்பகுதியினர் நகைக்கடைகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பாஸ்கர், பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடைக்குள் சென்று பார்வையிட்டனர்.

வெள்ளிப் பொருட்கள்-12 பவுன் நகைகள்

அப்போது, பிரபு கடையில் 10 கிலோ வெள்ளி பொருட்களும், 6 பவுன் நகைகளும் திருடப்பட்டு இருந்தது. இதேபோல் பாஸ்கர் கடையில் 6 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. மேலும் ரூ.5 ஆயிரமும் திருட்டு போய் இருந்தது.

இதேபோல் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள தெற்கு மாரியம்மன் கோவிலின் பூட்டையும் மர்ம ஆசாமிகள் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

இது குறித்த புகார்களின் பேரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் திருட்டு நடைபெற்ற கடைகளில் மோப்பம் பிடித்துவிட்டு, அங்கு இருந்து சிறிதுதூரம் ஓடி சென்று நின்றது.

ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்