ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
வடவள்ளியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு போனது.
வடவள்ளி
கோவை வடவள்ளி அருகே உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள், கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.