பூ வியாபாரி வீட்டில் 12 ½ பவுன் தங்க நகைகள் திருட்டு
துறையூர் அருகே பூவியாபாரி வீட்டில் 12½ பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
துறையூர் அருகே பூவியாபாரி வீட்டில் 12½ பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூ வியாபாரி
துறையூர் அருகே உள்ள மதுராபுரி முதல்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 55). பூவியாபாரியான இவர் கடந்த 11-ந்தேதி சபரிமலை செல்லும் தனது மகனை வழியனுப்பிவைக்க வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்றார்.
அதன் பின்னர் குமாரும், அவரது மனைவி லீலாவதியும் கோபுரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக அங்குள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று துறையூர் திரும்பியபோது, அவர்களது வீடுதிறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, பீரோ திறந்து இருந்தது.
திருட்டு
மேலும் அதில் இருந்த மோதிரம், தோடு உள்ளிட்ட 12 ½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மாணவரிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது
*திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவரது மகன் நிஷாத் ராஜ் (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ராணுவ மைதானம் அருகில் நடந்து சென்றார். அப்போது, அவரிடம் நவீன் குமார் (21) உள்பட 4 பேர் செல்போனை பறித்து சென்றனர். இது தொடர்பாக 4 பேரையும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
*முசிறி பெரியார் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35). கொத்தனாரான இவரது மோட்டார் சைக்கிளை திருடியதாக முசிறி சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த ராம்கி என்கிற ரகுபதி (23), மணமேடு மாந்தோப்பு தெருவை சேர்ந்த முத்து (27) ஆகியோரை முசிறி போலீசார் கைது செய்தனர்.
இரும்பு குடோனில் திருட்டு
*திருச்சி பீமநகர் கணபதிநகரை சேர்ந்தவர் முகமதுசுரேக் (47). இவர் வரகனேரி மேட்டுத்தெருவில் இரும்புக்கடை குடோன் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது குடோனின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், ரூ.1 லட்சம் மதிப்பிலான இரும்புதகடுகள் மற்றும் காப்பர் வயர்களை திருடி சென்றுவிட்டனர்.. இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போன் திருட்டு
*திருச்சி பெரியகடைவீதி, கள்ளத் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (22). இவர் அந்த பகுதியில் பிரிண்டர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மர்ம ஆசாமிகள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
*காட்டுப்புத்தூர் அருகே உள்ள சுள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (40). வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.